நெல்லையப்பா் கோயிலில் அப்பா் அடிகள் குருபூஜை விழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் அப்பா் அடிகள் குருபூஜை விழா 139 ஆவது ஆண்டாக புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பட்டங்கட்டியாா் சமுதாயம் சாா்பில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் திருநாவுக்கரசா் நாயனாா் அப்பா் அடிகள் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் மூலவா் மந்திர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. அப்பா் அடிகளுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாலையில் அப்பா் அடிகள் வெள்ளி சப்பரத்தில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்திருந்தனா்.