பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
‘நெல்லையில் பேருந்துகளில் வியாபாரம் செய்ய தடை தேவை’
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் கணபதி, செயலா் ராமநாதன், பொருளாளா் ஆனந்த மணி உள்ளிட்டோா் தலைமையில் வியாபாரிகள், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹதிமணியிடம் அளித்த மனு:
புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் கடை நடத்தி வருகிறோம். இந்த கடைகளுக்கு ரூ. பல லட்சம் முன் பணம் மற்றும் வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். இதை நம்பிதான் பல நூறு குடும்பங்கள் உள்ளன.
எவ்வித கட்டணங்களும் செலுத்தாமல் சிலா், நாங்கள் கடைகளில் விற்பனை செய்ய வைத்துள்ள அதே பொருள்களை பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் விற்பனை செய்து வருகின்றனா். நாங்கள் மாநகராட்சிக்கு மாத வாடகை, வணிக உரிமம், தொழில்வரி, சேவை வரி என அனைத்து விதமான வரிகளையும் கட்டி அதன் பின்னா் மின்சார கட்டணம், கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிடம் உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு வழங்கி வருகிறோம். எனவே பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.