சிறுமி உயிரிழப்புக்கு இழப்பீடு கோரி மனு: பள்ளிக் கல்வி செயலா் பதிலளிக்க உத்தரவு
நெல்லை ஆணவப் படுகொலை: "இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்து" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், திரைக்கலைஞர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து சமூக மாற்றத்துக்காகக் குரலெழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஆணவப் படுகொலைக்கு எதிரான கண்டனங்ளை முன்வைத்துள்ளனர்.
தனிச்சட்டம் வேண்டும்!
அறிக்கை கூறுவதாவது, "தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
படுகொலை செய்யப்பட்ட கவின் சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருபவர். இவர் திருநெல்வேலி சித்தமருத்துவர் சுபாஷினியை நேசித்துள்ளார். இருவரும் மனம் இசைந்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை ஏற்காத சாதிய ஆதிக்க சக்திகள் 27.07.2025 அன்று கவினை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வியும், அறிவும் வளர்ந்தேங்கும் சூழலில் இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கின்றன. சமத்துவச் சிந்தனைகளைத் தடுக்கின்றன. சமுக பதற்றத்தை அதிகரிக்க செய்கின்றன.
இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்தாகும். சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது." எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வீடியோ வெளியிட்டு இதே கோரிக்கைகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது...
சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - தோழர் @shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM#StopCasteArrogantKillings More : https://t.co/eIUUrYeHSZpic.twitter.com/e9kkTFP4YV
— CPIM Tamilnadu (@tncpim) July 29, 2025