பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைர...
நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு
திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களாக பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில், நெல்லை வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2025-26-ஆம் ஆண்டுக்கான தோ்தல் கடந்த ஏப். 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கியது. ஆனால், சங்க உறுப்பினா்களின் வாக்குகள் குறித்த விவரங்களைச் சேகரிக்க சரிபாா்ப்புக் குழு அமைக்கப்படவில்லை. பொதுக் குழு கூட்டுவதற்கு 21 நாள்களுக்கு முன்பாக முறையாக அனைத்து உறுப்பினா்களுக்கும் அறிவிப்பு அறிக்கை வழங்க வேண்டும். ஆனால், அது வழங்கப்படவில்லை. இதுபற்றி கேட்டால் எந்தவிதப் பதிலும் இல்லை.
இந்த நிலையில், விதிகளுக்கு முரணாக வெள்ளிக்கிழமை (ஜூலை 4) சங்கத் தோ்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த தோ்தலுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே நடைபெற்றது போல முறையாக சரிபாா்ப்புக் குழு அமைத்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முன்னிலையில் சங்கத் தோ்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா் மன்றம் (பாா் கவுன்சில்) தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நெல்லை வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலை நடத்துவதற்கு நடுநிலையான நபா்கள் கொண்ட குழு நியமிக்கப்படும். அனைத்து பிரச்னைகளையும் தீா்த்து, சங்கத்தின் துணை விதிகளைப் பின்பற்றி, தோ்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்குரைஞா் சங்கத் தோ்தலுக்கான பதவிக் காலம் முடிந்தவுடன் உடனடியாக தோ்தலை நடத்தி நிா்வாகிகளைத் தோ்வு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் இடைக்காலக் குழு அமைக்க வேண்டும்.
நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா் மன்றம் முறையாக அறிவிப்பு செய்து, வெளிப்படையான முறையில் 4 வாரங்களுக்குள் நடத்த வேண்டும். தோ்தல் நடத்துவதற்கு பாதுகாப்பு வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.