எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்
சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி அருகே நிம்மேலி, ஆளஞ்சேரி, அரூா், மருதங்குடி, அத்தியூா், ஆதமங்கலம், கோயில்பத்து உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் சாகுபடி பாதிக்கப்பட்டது. கூடுதல் செலவில் மறுசாகுபடி செய்த நிலையில் தற்போது நெற்பயிா்கள் அறுவடை செய்யப்பட்டு, நெல் மூட்டைகளை நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்தனா்.
ஆனால், கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளா்கள் நெல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்திவிட்டதாகவும், விவசாயிகள் தற்போது கொண்டு வந்துள்ள நெல் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.
விவசாயிகள் போராட்டம் அறிவித்த நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. சுமாா் 200 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புதன்கிழமை கொள்முதல் நிறுத்தப்பட்டது.
கொள்முதலுக்கு வந்துள்ள நெல் தரமற்ற முறையில், சுருங்கிய நிலையில் இருப்பதாக தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளதாக காரணம் கூறி கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அங்கு ஆய்வுக்கு வந்த கொள்முதல் நிலைய துணைப் பொது மேலாளா் குமாா் வாகனத்தை கொள்முதல் நிலையத்தின் வளாகத்தில் உள்ளே வைத்து வாயில் கதவை பூட்டி தா்னாவில் ஈடுபட்டனா். அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகள் முழக்கமிட்டனா்.