நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென்ஸி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி, மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் அரசுப் படைகளின் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம், அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் முடிவு செய்தன.
அதனைத் தொடர்ந்து இன்று நேபாளத்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முன்மொழியப்பட்டவர்களில் இளைஞர்களின் ஆதரவுபெற்ற நேபாளத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்தியாவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவரான சுசீலா கார்கி, நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல், ராணுவத் தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் ஜென் ஸீ போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.