மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த மே.12 ஆம் தேதியன்று அதனை வாங்கிக் குடித்த எராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில், நேற்று (மே 13) சுமார் 21 பேர் பலியான நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும், 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால், இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அந்தக் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள பங்கலி, படால்புரி, மராரி கலான், தல்வாண்டி கும்மன், கர்னாலா, பங்வான் மற்றும் தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் எனத் தெரியவந்துள்ளது.
முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், பலியானவர்களின் குடும்பத்தினரை நேற்று (மே 13) சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!