படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!
அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரைக் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. குஜராத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது தாக்கரேவின் பேச்சு.
இதையடுத்து, அரசியல் ஆதாயத்துக்காக தேசிய தலைவர்களை அவமதித்து பேசுவதாக தாக்கரேவுக்கு ‘பட்டிதார்’ சமூகத்தைச் சேர்ந்தோரும் ஆம் ஆத்மி கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .
கடந்த ஜூலை 18-ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய தாக்கரே, குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களும் தலைவர்களும் மகாராஷ்டிரத்திலிருந்து மும்பையை பிரிக்க நினைத்தனர் என்றார். அப்போது அவர் வெளிப்படையாக படேல் சமூகத்தை தாக்கி சர்தார் படேல் மற்றும் மொரார்ஜி தேசாய் பெயர்களை குறிப்பிட்டதால், குஜராத்தில் தாக்கரே மீது கடும் கொந்தளிப்பு உண்டாகியுள்ளது.
இதையடுத்து, பட்டிதார் சமூகத்தை சேர்ந்த தலைவர் அல்பேஷ் கதீரியா பேசுகையில், “தாக்கரேவால் குஜராத் பெருந்தலைவர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மராத்தி மனப்பான்மையை கொண்டவராக தாக்கரே பேசியிருக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“குஜராத் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவமானமக அமைந்துவிட்டது தாக்கரேவின் பேச்சு. ஆகவே, அவர் பொது மன்னிப்பு கேட்டாக வேண்டும்” என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“இந்தியாவின் பெருமையாக திகழும் இரு பெரும் தலைவர்களை தாக்கரே அவமதித்து பேசும்போது, மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசு அமைதி காப்பது ஏன்?” என்று ஆம் ஆத்மி கேள்வியெழுப்பியுள்ளது. தாகரே விவகாரம் குஜராத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இதையும் படிக்க:1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே