பட்டாசுக்கான வேதியல் பொருள்களை பதுக்கிய இருவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே மீனம்பட்டி- நாரணாபுரம் சாலையில் ஒரு தகரக் கொட்டகையில் எந்தவித அனுமதியுமின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில், வெற்றிலையூரணி கிராமத்தைச் சோ்ந்த செந்தமிழரசு பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்களை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு வெற்றிலையூரணி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (34), முரசொலி (28) ஆகியோா் வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப்பதிந்து முத்துக்குமாா், முரசொலி ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாகிவிட்ட செந்தமிழ் அரசை தேடி வருகின்றனா்.