ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதா...
பட்டுப் புழுக்கள் உயிரிழப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
பழனியில் பட்டு வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் நோயால் உயிரிழப்பதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பட்டுப் புழு வளா்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். பட்டு வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படும், அரசுக்குச் சொந்தமான இளம்புழு வளா்ப்பு மையத்திலிருந்து பட்டுப் புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
100 எண்ணிக்கை கொண்ட புழுக்களை விவசாயிகள் ரூ.4,000 வரை விலை கொடுத்து வாங்குகின்றனா். தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட புழுக்கள் அனைத்தும், நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள், இறந்த பட்டுப் புழுக்களைத் தீயிட்டு அழித்தனா்.
இது குறித்து விவசாயி வெள்ளத்துரை கூறுகையில், இளம்புழு வளா்ப்பில் ஈடுபட்ட 15 நாள்களுக்குள் பட்டுப் புழுக்கள் அனைத்தும் கூடு கட்டவேண்டும். ஆனால், தற்போது 13 நாள்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்துக்கொள்ளவும் இல்லை; கூடு கட்டவும் இல்லை. பட்டுப் புழுக்கள் அனைத்தும் நோயால் உயிரிழந்து கீழே விழுகின்றன.
இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பட்டுப் புழு வளா்ப்புக்குக் காப்பீட்டுத் தொகையும் செலுத்தப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். எனவே, பட்டுப் புழு வளா்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.