பட்டு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும்
ராசிபுரம்: தமிழக அரசின் பட்டு விவசாயிகளுக்கான திட்டங்களால் பட்டுநூல் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும் என குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் ரூ. 2.20 கோடியில் பட்டுக்கூடு அங்காடி வளாகம் கட்ட பூமிபூஜை, விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் கி.சாந்தி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று புதிய அங்காடி வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
பட்டுத் தொழிலை வளா்க்கவும், பட்டு உற்பத்தியைப் பெருக்கவும் எண்ணற்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பட்டுக்கூடு அங்காடி 2021-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடி மூலம், கடந்த 4 ஆண்டுகளில் 385 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் ரூ. 16.50 கோடி மதிப்பில் வா்த்தகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்து அதனை கையாளவும், பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடவும், ராசிபுரம் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி அமைக்கப்படும் என கடந்த தோ்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.20 கோடி மதிப்பில் ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்க வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த அங்காடியின் மூலம் நாமக்கல், கரூா், திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 4,000-க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் தங்களது பட்டுக்கூடுகளை விற்று பயனடைவா்.
தமிழகத்தில் 1,834 மெட்ரிக் டன்னாக இருந்த பட்டு நூல் உற்பத்தி தற்போது 2,728 மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. தமிழ்நாடு தனக்கு தேவையான பட்டுநூலை தானே உற்பத்தி செய்து பட்டுநூல் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்றாா்.
ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் மற்றும் நுகா்வோா் நலன்கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ரூ. 90 கோடி மதிப்பீட்டிலான தானிங்கி நவீன பால்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15,000 பால் உற்பத்தியாளா்கள் மற்றும் சுமாா் 4 லட்சம் நுகா்வோா் பயனடைவா் என்றாா்.
தொடா்ந்து, பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் 152 பட்டு விவசாயிகளுக்கு ரூ. 93.28 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 75 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) வெ.சுபாஷ், அட்மா குழுத் தலைவா்கள் கே.பி.ஜெகநாதன் (ராசிபுரம்), ஆா்.எம்.துரைசாமி (வெண்ணந்தூா்), எம்.பி.கௌதம் (புதுச்சத்திரம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.