பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்
தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 (ராயபுரம், திருவிக நகர்) ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் 12-வது நாளாக இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்தத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும் பிஎஃப், இஎஸ்ஐ, சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளும் உள்ளதாக விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி, தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைந்து பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
எனினும் தங்களை பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளார்.
பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்குழு கூறியுள்ளது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபோது வைத்த கோரிக்கை. அவர் கொடுத்த வாக்குறுதியைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம். முதல்வர் அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்று கூறச் சொல்லுங்கள். நாங்கள் போராட்டத்தைக் கைவிடுகிறோம்" என்று பேசியுள்ளார்.