பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு அமைச்சகம்...
பதற்றமான நேரத்தில் மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்: அகிலேஷ் யாதவ்
பதற்றமான நேரத்தில் மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்: அகிலேஷ் யாதவ்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிவையில், மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியாவில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் எட்டு ஏவுகணைத் தாக்குதலை வியாழக்கிழமை இரவு நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் அனைத்து ஆளில்லாத ட்ரோன் மற்றும் ஏவுகணைகளையும் இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு ஒவ்வொரு ஏவுகணையையும் இடைமறித்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் தாக்குதலை நிரூபிக்கும் வகையிலான தடயங்கள் பல இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் ஜம்மு- காஷ்மீரின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
உரி, குப்வாரா (கர்னா, தங்தார்), பந்திபோரா (குரேஸ்), ரஜெளரி மற்றும் ஆர்.எஸ். புரா ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்ற அச்சங்களுக்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை முறியடித்த "நமது துணிச்சலான ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். நாங்கள் அனைவரும் நாட்டுடன் ஒன்றாக நிற்போம்.
காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், "மக்கள் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகிலேஷ், இதுபோன்ற செயல்கள் அமைதியை குலைப்பதற்காக எதிரிகளால் உருவாக்கப்படும் ஒரு சதி அல்லது உத்தியாக இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், "இது ஒரு நெருக்கடியான நேரம், இதற்கு இன்னும் அதிக ஞானம் தேவை" என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், இதுபோன்ற நேரத்தில் "மக்கள் அனைவரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அல்லது தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பதற்றமான காலங்களில் தனிப்பட்ட பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அகிலேஷ், "அவரவர் நிலைகளில் பொறுப்புடன் செயல்படுங்கள்.
அமைதியாக இருங்கள், மற்றவர்களையும் அமைதியாக இருக்க ஊக்குவிக்கவும். இந்த நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுங்கள். ஜெய் ஹிந்த் என கூறியுள்ளார்.