பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு
பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணியாற்றினர்.
மொத்தம் 2,400 பேர் அவ்வாறு பணியாற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேவேளையில், பொது மக்களுக்கான மருத்துவ சேவைகளில் எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர் சங்கத்தினர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாக 2,400 பேர் நியமிக்கப்பட்டோம்.
பெருந்தொற்று காலங்களிலும், நோய்த் தொற்று பரவும் நேரங்களிலும் காலநேரமின்றி தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களை நியமனம் செய்தபோது ஆய்வக நுட்பநராக தகுதி பெற சிஎம்எல்டி எனப்படும் ஓராண்டு கல்வி திட்டம் மட்டுமே இருந்தது. அதன் பின்னரே டிஎம்எல்டி எனப்படும் இரு ஆண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், சிஎம்எல்டி படிப்பை பயின்ற எங்கள் அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. டிஎம்எல்டி படித்திருந்தால் மட்டுமே இரண்டாம் நிலை ஆய்வக நுட்பநர்களாக பதவி உயர்வு பெற முடியும் எனக் கூறியுள்ளது. எங்களது காலத்தில் இல்லாத ஒரு படிப்பை நாங்கள் எவ்வாறு கற்க முடியும்?
பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் இந்த முடிவு எங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது மட்டுமன்றி 2,400 பேரும் பதவி உயர்வே இல்லாமல் பணி ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என்றனர்.