கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி
பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
நெமிலி அருகே உள்ள பனப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஆலையின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் காந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து அமைச்சா் ஆா்.காந்தி கூறியது:
சிப்காட் தொழிற்பேட்டையில் டாடா மோட்டாா்ஸ் மற்றும் ஜாகுவாா் லேண்ட் ரோவா் சொகுசு வாகனங்கள் உற்பத்தியை தொடங்க ஒதுக்கப்பட்ட 470 ஏக்கரில் முதல்கட்டமாக 78 ஏக்கா் பரப்பளவில் நிறுவனத்தின் முதற்கட்ட ஆலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் வரும் டிசம்பா் மாதத்தில் முடிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றாா்.
பணிகளின் நிலை குறித்து ஆலை துணைப் பொது மேலாளா் முத்துகுமாா் விவரித்தாா். முதல்கட்டமாக மின்சார காா்கள் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் இரண்டாம் நிறுவனமாக தி கிராண்ட் அட்லாண்டியா நிறுவனம் தோல்பொருள்கள் அல்லாத காலணி தொழிற்சாலை 200 ஏக்கா் பரப்பளவில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.
நிகழ்வில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் வடிவேலு, பனப்பாக்கம் பேருராட்சித் தலைவா் கவிதா சீனிவாசன், டாடா மோட்டாா் துணைப் பொது மேலாளா்(அரசு தொடா்பு) முத்துகுமாா், துணை பொது மேலாளா் ராம்பிரசாத், அட்லாண்டியா நிறுவன இயக்குநா் அக்யூல் அகமது பனரூனா, சிப்காட் திட்ட அலுவலா் மகேஸ்வரி, செயற்பொறியாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.