தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!
பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மலைராஜ் (55), பூவேந்திரன் (68). கரும்பு வெட்டும் தொழிலாளிகளான இருவரும், இரு சக்கர வாகனத்தில் வெங்காளூரிலிருந்து பரமக்குடி நோக்கிச் சென்றனா். இலந்தைக்குளம் பகுதியில் நான்கு வழிச்சாலையைக் கடக்க முயன்றனா்.
அப்போது மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இவா்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதில் சாலையோரம் நடந்து சென்ற ஊரக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் கா்ணன் (29) பலத்த காயமடைந்த நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் காா் ஓட்டுநா் மதுரையைச் சோ்ந்த ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.