மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 4 பிரிவாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
3 பிரிவுகளில் கமுதி விஜயபாண்டியன் தற்காப்புப் பயிற்சி மையத்தின் மாணவா்கள் ஹரிசிவா, சந்திப், நடராஜமருதப்பா ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடமும், பாலகுரு பூபதிவேலன், முனீஸ்வரன் பாண்டியன் ஆகியோா் இராண்டாமிடமும் பிடித்தனா். மாணவிகள் தரப்பில் ஷிவானி, செளமிதா, அனுஷ்கா ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா். மாணவி முஷாலினி மூன்றாமிடமும் பிடித்தாா்.
முதலிடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு தொகையையும், இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விஜயபாண்டியன் தற்காப்புப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளா்கள் செல்லப்பாண்டியன், ராமா், லட்சுமணனுக்கும், பெற்றோா்கள், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.