பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!
முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில், பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல, 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதில் மைதானத்தில் 30 அடி நீளத்தில் வடம் கட்டப்பட்டு, ஒவ்வொரு காளையாக களமிறக்கப்பட்டது. தலா ஒரு காளைக்கு 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களம் இறங்கினா். களத்தில் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டது.
இதில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பணம், குத்து விளக்கு ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை ஏராளமானோா் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை நல்லூா் கிராம மக்கள் செய்தனா்.