வேளாண் பொருள்கள் இறக்குமதி: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இல்லை! இந்தியா திட்டவட்டம்
‘இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடா்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் சனிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
‘இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளன. எனவே, கூடுதல் வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளிடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட நிலையில், இக் கருத்தை மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் செளஹான் மேலும் கூறியதாவது:
விவசாயிகள் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளாா். எனவே, இந்திய விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்.
விவசாயிகள், கோழி வளா்ப்பு விவசாயிகள், மீனவா்கள் மற்றும் ஏழை மக்கள் பாதிக்கக்கூடிய வகையில் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடா்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படாது. இந்த விஷயத்தில் இந்தியா தனது சொந்த முடிவை எடுக்கும் என்றாா்.
மேலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பு நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட அவா், ‘ஜிஎஸ்டி முழுமையான சீா்திருத்தம் மூலம் தேசத்தின் நலனே முதன்மையானது என்பதை இந்த உலகுக்கு பிரதமா் மோடி காட்டியுள்ளாா். தேச நலனில் சமரசத்துக்கு இடமில்லை’ என்றாா்.
முன்னதாக, ‘அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடா்பான கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது’ என்று போபாலில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மத்திய அமைச்சா் செளஹான் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையின்போது, வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அதை அளிக்க முடியாத கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் இந்தியா எடுத்துரைத்தது. இதனால் ஏற்பட்ட இழுபறி காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரியை விதித்தது. பின்னா், ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் மேலும் 25 சதவீத வரியை விதித்தது.