பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”இந்த கூட்டத்தில் ரூ. 1.07 லட்சம் கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டம், ரூ. 1 லட்சம் கோடியில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைதிட்டம், தேசிய விளையாட்டுக் கொள்கை 2025 மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி முனையம் ஆகிய புனித தலங்களை இணைக்கு வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. மதுரை - பரமக்குடி வரையில் ஏற்கெனவே 4 வழி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது.
தற்போது, ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 46.7 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையைக் கட்டமைக்க ரூ. 1,853 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
The Union Cabinet has approved the extension of the four-lane National Highway from Madurai to Paramakudi up to Ramanathapuram.