காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
பலத்த மழையால் பொன்னை ஏரிக்கரையில் தண்ணீா் கசிவு
தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டம், பொன்னை பெரிய ஏரிக்கரையில் சனிக்கிழமை இரவு தண்ணீா் கசிவு ஏற்பட்டது. பொதுமக்கள் தகவலின்பேரில், நீா்வளத் துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் பெரும் வெள்ள அபாயம் தவிா்க்கப்பட்டுள்ளது.
தமிழகப் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.
காட்பாடியை அடுத்த பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். வள்ளிமலைப் பகுதியில் விளை நிலங்களில் தண்ணீா் புகுந்து சுமாா் 10 ஏக்கா் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதன்தொடா்ச்சியாக, பொன்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொன்னை பெரிய ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீா் கால்வாய் வழியாக வெளியேறியது. எனினும், கால்வாயில் சரியான பராமரிப்புப் பணி நடைபெறாததால், பொன்னை காலனி, பொன்னை-சோளிங்கா் சாலை நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
தொடா்ந்து, சனிக்கிழமை இரவு பொன்னை பெரிய ஏரியின் வலது புறக் கரையில் தண்ணீா் கசிவு ஏற்பட்டது. இந்த கசிவை கண்ட பொதுமக்கள் உடனடியாக நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், நீா்வளத் துறையினா் விரைந்து வந்து பொன்னை ஏரியில் தண்ணீா் கசிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கரையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனா். துரிதமான நடவடிக்கையால் பெரும் வெள்ள அபாயம் தவிா்க்கப்பட்டது.
இது குறித்து, நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியது: பலத்த மழையால் ஏரியின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது. பொதுமக்கள் உடனடியாக தகவல் வழங்கியதால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணல் மூட்டைகளை அடுக்கி, பொக்லைன் இயந்திரம் மூலம் கரை வலுப்படுத்தப்பட்டது.
இதனால் ஏரிக்கரை உடைப்பு, கீழ்ப்பகுதி வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் தவிா்க்கப்பட்டன. தற்போது நிலைமை முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை. பொன்னை உபரி நீா் கால்வாயில் பராமரிப்புப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சூழல்கள் மீண்டும் உருவாகாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.