'கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி' - ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெ...
"பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனைத்தான்..." - யார் இந்த US Open சாம்பியன் ஆயுஷ் ஷெட்டி?
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார்.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 6-ம் இடத்தில் இருக்கும் சீன தைபே வீரர் சௌ டியென் சென்னுக்கு எதிரான அரையிறுதியில் முதல் செட்டை இழந்தபோதிலும் அடுத்து இரண்டு செட்களை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி.
அதைத் தொடர்ந்து, நேற்றைய இறுதிப்போட்டியில் கனடா வீரர் பிரையன் யாங்கை எதிர்கொண்ட ஆயுஷ் ஷெட்டி முதல் இரண்டு செட்டையும் வென்று சாம்பியன் ஆனார்.

இதன் மூலம், இந்த ஆண்டில் சீனியர் சுற்றுப்பயணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அடைந்திருக்கிறார்.
தனிப்பட்ட முறையில், இதுதான் ஆயுஷ் ஷெட்டியின் முதல் BWF Super300 சாம்பியன் பட்டம். சீனியர் அளவிலும் இதுதான் அவருக்கு முதல் மகுடம்.
"இந்த வெற்றி நிறைய அர்த்தமுடையது" என்று நெகிழும் ஆயுஷ் ஷெட்டி, தனது அடுத்த இலக்காக இந்த வாரம் தொடங்கும் கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரை எதிர்நோக்குகிறார்.
யார் இந்த ஆயுஷ் ஷெட்டி?
மங்களூரூவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சிறுவயதில் தனது தந்தை பேட்மிண்டன் விளையாடுவதைக் கண்டு ஈர்க்கப்பட்டார்.
எட்டு வயதிலேயே பேட்மிண்டன் ஆடத் தொடங்கிய ஆயுஷ் ஷெட்டி, தொடக்கத்தில் கர்கலா மற்றும் மங்களூருவில் உள்ளூர் பயிற்சியாளர்களான சுபாஷ் மற்றும் சேதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.
அதையடுத்து, இவரின் 12 வயதில் இவரது குடும்பம் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தது.
அந்த மாற்றத்தால் பெங்களூருவில் அவருக்கு சிறந்த பேட்மிண்டன் பயிற்சி கிடைத்தது.

கூடவே தனது கல்வியையும் அவர் விடாமல் தொடர்ந்தாலும், பேட்மிண்டன் அவருக்கு முன்னுரிமையாக ஆனது.
இவருக்கு 2023-ம் ஆண்டு மிகப்பெரும் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. காரணம், அந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று அசத்தினார்.
இதன்மூலம், BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் 6-வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அதைத் தொடர்ந்து, இந்திய ஜூனியர் ஒற்றையர் தொடரில் முதலிடம் பிடித்தார். இப்போது, 2025-ம் ஆண்டு ஆயுஷ் ஷெட்டிக்கு சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரில் முன்னாள் உலக சாம்பியன்கள் லோ கீன் யூ மற்றும் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோரைத் தோற்கடித்து அரையிறுதி வரை முன்னேறினார்.
கடந்த மாதம் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி அரையிறுதிவரை முன்னேறினார்.
தற்போது, அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

பேட்மிண்டனில் 20 வயதிலேயே இந்தியாவின் நம்பிக்கையாக வளர்ந்துவரும் ஆயுஷ் ஷெட்டியை இப்போது பலரும், அவரின் ஆட்டத்திறன் மற்றும் உயரத்தை (உயரம் 6 அடி 4 இன்ச் ) வைத்து 2024 ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்செல்சனுடன் (உயரம் 6 அடி 4 இன்ச்) ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
எதுவாகினும் ஒப்பீடுகளையெல்லாம் கடந்து பேட்மிண்டனில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க ஆயுஷ் ஷெட்டிக்கு வாழ்த்துகள்!