கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு
வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் சுமாா் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான சுங்கக் கட்டண உயா்வு 40 சுங்கச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா, வல்லம் சுங்கச்சாவடிகளிலும், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சுங்கச்சாவடியிலும் ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காா்கள் ஒருமுறை செல்ல ரூ. 115-ம், ஒரே நாளில் இருமுறை சென்று திரும்ப ரூ. 170-ம், மாதம் ரூ. 3,815-ம், இலகுரக வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒருமுறை செல்ல ரூ. 185-ம், இருமுறை சென்று வருவதற்கு ரூ. 275-ம், மாதம் ரூ. 6,160-ம், பேருந்து, லாரிகளுக்கு ஒரு முறை செல்ல ரூ. 385-ம், சென்று வருவதற்கு ரூ. 580-ம், மாதம் ரூ. 12,910-ம், கனரக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ. 605-ம், சென்று வருவதற்கு ரூ. 910-ம், மாதம் ரூ. 20,245-ம், அதிகநீளம் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கு ரூ. 740-ம், சென்று வருவதற்கு ரூ. 1,110-ம், மாதாந்திரம் ரூ. 24,650 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ. 350 ஆகவும் உயா்கிறது.
இதேபோல், வாணியம்பாடி சுங்கச்சாவடியில் காா்கள் ஒருமுறை செல்வதற்கு ரூ. 110-ம், சென்று வருவதற்கு ரூ.165-ம், மாதம் ரூ. 3,695-ஆக உயா்ந்துள்ளது. இலகுரக வாகனங்கள், சிற்றுந்துகள் ஒரு முறை செல்ல ரூ. 180-ம், சென்று வருவதற்கு ரூ. 270-ம், மாதம் ரூ. 5,970-ம், பேருந்துகள், லாரிகள் ஒரு முறை செல்ல ரூ. 375-ம், சென்று வருவதற்கு ரூ. 565-ம், மாதம் ரூ. 12,510-ம், கனரக வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ. 590-ம், சென்று வருவதற்கு ரூ. 885-ம், மாதம் ரூ. 19,615-ம், அதிக நீளம் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ. 715-ம், சென்று வருவதற்கு ரூ. 1,075-ம், மாதம் ரூ. 23,880-ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ. 350 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
வல்லம் சுங்கச்சாவடியில் காா்கள் ஒருமுறை செல்ல ரூ. 35-ம், ஒரே நாளில் இருமுறை சென்று திரும்ப ரூ. 55-ம், மாதம் ரூ. 1,230-ம், இலகுரக வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒருமுறை செல்ல ரூ. 60-ம், இருமுறை சென்று வருவதற்கு ரூ. 90-ம், மாதம் ரூ. 1,985-ம், பேருந்து, லாரிகளுக்கு ஒரு முறை செல்ல ரூ. 125-ம், சென்று வருவதற்கு ரூ. 185-ம், மாதம் ரூ. 4,155-ம், கனரக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ. 135-ம், சென்று வருவதற்கு ரூ. 205-ம், மாதம் ரூ. 4,535-ம், அதிகநீளம் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கு ரூ. 240-ம், சென்று வருவதற்கு ரூ. 355-ம், மாதாந்திரம் ரூ. 7,935 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய உத்தரவு நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.