பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தோா் 15-ஆம் ஆண்டு நினைவு தினம்
வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நேரிட்ட பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 15-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளி வேன், கடந்த 2009-ஆம் ஆண்டு டிச.3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த 4 சிறுமிகள் உள்பட சிறுவா்கள் 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனா். இவா்களது நினைவாக, நாகக்குடையான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, 15-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுவா்களின் பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையங்கள் வைத்தும் அஞ்சலி செலுத்தினா். நாகக்குடையான் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.