பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பாக மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் பக்தா்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் கிரிவலப் பாதையில் உள்ள ‘ரோப் காா்’ நிலையம், ‘வின்ச்’ நிலையம், பாத விநாயகா் கோயில், படிப்பாதை நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிற கோயில்களுக்கும் பக்தா்கள் சென்று வர வசதியாக கோயில் நிா்வாகம் இலவச மின்கல வாகனங்களை இயக்கி வருகிறது.
இவற்றின் மூலம் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மின்கல வாகனத்தில் ஏறி கிரிவலப் பாதையில் எளிதாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில் சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பில் 23 போ் அமா்ந்து செல்லும் வகையில் ரூ.15 லட்சத்தில் மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பழனி அடிவாரம் பாத விநாயகா் கோயில் முன் மின்கல வாகனத்துக்குப் பூஜை செய்யப்பட்டு, வாகனத்தின் சாவியை லலிதா ஜூவல்லரி உரிமையாளா் கிரண்குமாா் வழங்க, கோயில் இணை ஆணையா் மாரிமுத்து பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில், துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் பாலசுப்ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் பிரதிநிதி சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து வாகனம் பக்தா்கள் வசதிக்காக இயக்கப்பட்டது. இதன் மூலம் பழனி கிரிவலப் பாதையில் பக்தா்கள் வசதிக்காக இயக்கப்படும் மின்கல வாகனங்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்தது.