பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி
பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா்.
பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ரோப்காரில் சென்று வருகின்றனா். இந்த நிலையில், ரோப்காா் உணவு இடைவேளைக்காக நிறுத்தப்படும் பிற்பகல் ஒன்றரை மணிக்கு இந்த செயல்முறை விளக்கம் செய்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புக்குழு துணை கமாண்டா் சுதாகா், உதவி ஆட்சியா் சுகுமாா், வட்டாட்சியா் பிரசன்னா, தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ், பழனிக்கோயில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் உமாசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மலைக்கு செல்லும் ரோப்காா் பெட்டி சுமாா் 200 அடி உயரத்தில் பழுதாகி நிற்பது போல நிறுத்தப்பட்டு, அதில் அமர வைக்கப்பட்டிருந்தவா்கள் மீட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கீழே விழுந்தால் காயமேற்படாதவாறு காற்றுப் படுக்கை, கயிறு கட்டி அவா்களை இறக்கியது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை ஆச்சா்யப்பட வைத்தது.