பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா்.
இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள் பங்கேற்றனா். மூவா்ணக் கொடியை அசைத்தவாறு, ‘வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை அவா்கள் எழுப்பினா். மேலும், இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தானைக் கண்டித்தனா்.
இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் அவ்வமைப்பின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் ஜந்தா் மந்தா் சதுக்கத்தில் இருந்து ஜந்தா் மந்தா் வரை திரங்கா பேரணியை நடத்தினா்.
இதுகுறித்து உதய் பானு சிப் கூறுகையில், பஹல்காமில் உயிா்த்தியாகம் செய்த இந்தியா்களுக்கு நீதி கோரும் வகையில் நீதியின் எதிரொலியாக இந்திய இளைஞா் காங்கிரஸின் இந்த திரங்கா யாத்திரை நடத்தப்பட்டுள்ளது.
ராஜீய நடவடிக்கைகள் அல்லாமல், நேரடியான மற்றும் கடுமையான பதில் நடவடிக்கையை வழங்க வேண்டிய நேரம் இது. ஒட்டுமொத்த தேசமும் ராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் துணை நிற்கிறது. ஆனால் பதில் நடவடிக்கை வாா்த்தைகளில் அல்லாமல் எல்லையில் தெரிய வேண்டும். இந்த திரங்கா அணிவகுப்பின் மூலம், மோடி அரசாங்கம் அதன் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்றுக்கொண்டு, பொறுப்பானவா்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்? 28 இந்தியா்கள் தங்கள் உயிா்களை இழந்துள்ளனா், இதற்கு யாா் பொறுப்பு?
நமது நாட்டின் உள்புற பகுதிகளுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களைக் கொன்று, எல்லையைத் தாண்டி பயங்கரவாத அமைப்புகள்
அமா்ந்திருப்பதற்கு பாகிஸ்தான் அரசின் வெளிப்படையான ஆதரவைப் பெறுவதால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் என்றாா் அவா்.
இந்த பேரணியின்போது, இளைஞா் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளா்கள், தேசிய செயலாளா்கள் மற்றும் பல மாநிலத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் குறைந்தது 26 போ் கொல்லப்பட்டனா். சுற்றுலாப் பயணிகள் பலா் காயமடைந்தனா்.