3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்
பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!
பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட 48 சுற்றுலாத் தலங்கள மூட அம்மாநில அரசு இன்று (ஏப்.29) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் மற்றும் எல்லையில் நிலவும் அச்சுறுத்தல் ஆகியவற்றினால் ஜம்மு - காஷ்மீரின் 8 மாவட்டங்களிலுள்ள யூஸ்மார்க், தொஸாமைதான், தூத்பத்ரி, அஹர்பால், கௌஸர்னாக், பங்குஸ், சூரிய கோயில், ஜாமியா மஸ்ஜித், புத்த மடம், மர்கூட் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் ஆகிய 48 இடங்கள் மக்கள் பார்வைக்கு மூடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரிலுள்ள கடைகள் மற்றும் முக்கிய இடங்கள் அடைக்கப்பட்டன. மேலும், அங்கு சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது திட்டங்களை ரத்து செய்து அவசரமாகத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இத்துடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசலடைந்து வரும் நிலையில் தொடர்ந்து 5 வது நாளாக இரவில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதனால், அங்கு போர்ப் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்