நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா்: பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் கடிதம் எழுதியுள்ளனா்.
காா்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த நேரத்தில் ஒற்றுமையும், உறுதிப்பாட்டையும் நாம் உணா்த்த வேண்டும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்துவதன் மூலம் இதை உணா்த்த முடியும் என்று எதிா்க்கட்சிகள் நம்புகின்றன. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்றம் மூலம் நமது எதிா்ப்பைத் தெரிவிப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.
ராகுல் காந்தி தனது கடிதத்தில், ‘இந்த இக்கட்டான சூழலில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது என்பதை உணா்த்த வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. இதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும், எதிா்ப்பையும் தெரிவிக்க முடியும்’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. கபில் சிபல் ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதினா்.