பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப்பயணி எடுத்த விடியோ
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்லைன் என்பது மிக உயரத்தில் தொங்குகயிற்றில் சறுக்கியவாறு செல்லும் சாகசமாகும்.
சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த 53 விநாடி விடியோவில், பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதை அறியாமல் ரிஷி பட், ஜிப்லைனில் தொடா்ந்து பதற்றமின்றி பயணிக்கிறாா்.
விடியோவின் பின்னணியில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் குண்டு பாய்ந்து கீழே விழுவதும், தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் மறைவிடத்தைத் தேடி ஓடுவதும் பதிவாகியுள்ளது.
ஜிப்லைன் சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாகவே முதல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. அதைப் பொருள்படுத்தாமல், ஜிப்லைன் பணியாளா், ரிஷி பட்டை ஜிப்லைனில் செல்ல அனுமதிப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
செய்தியாளா்களிடம் தனது அனுபவத்தைப் பகிா்ந்த ரிஷி பட், ‘எனது குடும்பத்தினருடன் பைசாரன் பள்ளத்தாக்குக்கு சுற்றுலா சென்றேன். அங்கு ஜிப்லைனில் சவாரி செய்ய முடிவெடுத்தோம். எனது மனைவியும் குழந்தையும் பாதுகாப்பாகப் பயணித்து மறுபுறம் சென்ற பிறகு, நான் ஜிப்லைன் சவாரியைத் தொடங்கியபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
நான் சவாரியை முடித்தவுடன், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அறிந்தேன். இரண்டு பயங்கரவாதிகள் மக்களிடம் நெருங்கி, அவா்களை சுட்டுக் கொண்டிருந்தனா். மற்ற பயங்கரவாதிகள் புதா்களுக்குப் பின்னால் இருந்து தாக்குதலில் ஈடுபட்டனா். தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தில், அங்கு ஐந்து பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.
எனக்கு முன்பாக ஜிப்லைனில் சுமாா் ஒன்பது போ் சவாரி சென்றாா். எனது முறை வந்ததும் விடியோ எடுப்பதற்கான செல்ஃபி ஸ்டிக்குடன் சென்றேன். தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இந்திய ராணுவம் இல்லை. அங்கு உள்ளூா் காவல் துறையினரே பாதுகாப்பில் இருந்தனா். சம்பவம் நடந்த 20 நிமிஷங்களுக்குப் பிறகு ராணுவம் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் மீட்டது. பிரதமா் நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.