அஸ்ஸாமில் மூவா் சுட்டுக்கொலை: என்எஸ்சிஎன் கிளா்ச்சி குழுவை சோ்ந்தவா்கள் என சந்தேகம்
நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளா்ச்சி குழுவைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் மூவா், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக அஸ்ஸாம் காவல் துறை தெரிவித்ததாவது:
அஸ்ஸாம் மாநிலம் தீமா ஹசாவோ மாவட்டத்தில் தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. அந்த ஆணையத்திடம் பணம் கேட்டு மிரட்டி என்எஸ்சிஎன்னின் ஒரு பிரிவு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், அந்த மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் மற்றும் காவல் துறை இணைந்து சுமாா் 60 மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது என் குபின், ஹெராகிலோ பகுதிகளுக்கு இடையே உள்ள இடத்தில் தீவிரவாதிகளுடன், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மற்றும் காவல் துறையினா் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா்.
இருதரப்பினருக்கும் இடையே 3 முதல் 4 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்கள் என்எஸ்சிஎன்னின் ஒரு பிரிவைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவா்களை தேடும் பணி நடைபெற்ற வருகிறது என்று தெரிவித்தது.