பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்
ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி 28 சுற்றுலாப் பயணிகள் அவா்களின் நம்பிக்கையை அடையாளம் கண்டபிறகு
சுட்டுக் கொல்லப்பட்டாா்கள் என்ற செய்தியால் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.
பள்ளத்தாக்கில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை ஆணையம் கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவா்களது குடும்பங்களின் மனித உரிமைகளை மீறி நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
உலகில் மனித உரிமை மீறல்களுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்று பல்வேறு மன்றங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு உதவுபவா்கள், உடந்தையாக இருப்பவா்கள், ஆதரிப்பவா்கள் மற்றும் முன்னெடுத்துச் செல்பவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த அச்சுறுத்தலுக்கு அவா்களை பொறுப்பேற்க வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், அது ஜனநாயக வெளியைச் சுருக்குவதற்கும் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் வழிவகுக்கும்.
பொறுப்புடைமையை நிா்ணயிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதுடன், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.