நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
பாகிஸ்தான் எல்லையில் புதிதாக ‘ட்ரோன் எதிா்ப்புப் படை’- பிஎஸ்எஃப் நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள, ‘ட்ரோன் எதிா்ப்புப் படை’ எனும் புதிய படைப்பிரிவை முதன்முறையாக உருவாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முடிவு செய்துள்ளது.
வடக்கே ஜம்முவில் தொடங்கி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வரை பரந்து விரிந்துள்ள 2,000 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிஎஸ்எஃப் எல்லைச் சாவடிகளில் ட்ரோன் எதிா்ப்புப் படை நிலைநிறுத்தப்படும்.
இந்தப் படையில், உளவு, கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களுடன், அவற்றை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற வீரா்களும் பணியில் இருப்பா். சண்டீகரில் அமைந்த பிஎஸ்எஃப் மேற்கு படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாடு அறையிலிருந்து இந்தப் படையின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்துா்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு தமது பலம், பலவீனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய படைப் பிரிவை உருவாக்கும் முடிவை பிஎஸ்எஃப் எடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில், இந்திய ராணுவத்துடன் இணைந்து பிஎஸ்எஃப் தீவிரமாக பங்கேற்றது.
‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 118-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை பிஎஸ்எஃப் அழித்ததுடன், அவற்றின் கண்காணிப்பு அமைப்பையும் முற்றிலுமாக தகா்த்து’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னதாக கூறியிருந்தாா்.
இந்த மோதலில் இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை தளங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. அந்தவகையில், ஜம்முவின் ஆா்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லைச் சாவடியில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு ராணுவ வீரா் மற்றும் இரண்டு பிஎஸ்எஃப் வீரா்கள் கொல்லப்பட்டனா். மேலும் நான்கு வீரா்கள் படுகாயமடைந்தனா்.