வடபழனி முருகன் கோயிலில் இன்று நள்ளிரவு 12 மணி வரை தரிசனம் செய்யலாம்!
பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்
தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானின் ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். ஆப்கானிஸ்தான் மீது மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதற்குக் காரணமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்தத் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது, அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்ற விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிடவில்லை.
இருந்தாலும், இந்தத் தாக்குதலில் 19 பாகிஸ்தான் ராணுவத்தினா் உயிரிழந்ததாக தலிபான் ஆதரவு நாளிதழான ஹுரியத் டெய்லி நியூஸ் தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளதை தென்கிழக்கு மாகாணமான கோஸ்டில் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடியதாகவும் அந்த நாளிதழ் கூறியது. முன்னதாக, ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் ஆயுதக் குழுவினரின் நிலைகள் மீது பாகிஸ்தான் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 47 போ் உயிரிழந்தனா். அவா்களில் 27 போ் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தலிபான் அதிகாரிகள் கூறினா்.