பாஜக புதிய தலைவா் தோ்வில் தாமதம்: அகிலேஷ் கிண்டல் - அமித் ஷா பதிலடி
பாஜக புதிய தலைவா் தோ்வில் நிலவும் தாமதத்தைக் குறிப்பிட்டு, மக்களவையில் அக்கட்சியை கிண்டல் செய்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலடி கொடுத்தாா். ‘அடுத்த தலைவரை முன்கூட்டியே தீா்மானிக்கும் குடும்பக் கட்சி அல்ல பாஜக’ என்று அமித் ஷா குறிப்பிட்டாா்.
மக்களவையில் புதன்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘பாஜகவின் குறைந்துவரும் வாக்குவங்கியை மேம்படுத்தும் நோக்கிலேயே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது; சமூகத்தை பிளவுபடுத்தும் இந்த முயற்சி, மதச்சாா்பற்ற நாடு என்ற இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்’ என்றாா்.
மேலும், ‘நாட்டிலேயே பெரிய கட்சி என்ற கூறிக் கொள்ளும் பாஜகவால் தங்களின் அடுத்த தலைவரை இன்னும் தோ்வு செய்ய முடியவில்லை’ என்று அவா் கிண்டலாக குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் மோடி அண்மையில் சென்றதையும் சுட்டிக் காட்டிய அவா், ‘75 வயதுக்கு மேற்பட்ட தலைவா்கள் ஓய்வு பெறுவது பாஜகவின் நீண்ட கால கொள்கை; ஆனால், அந்த வரம்பை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் சென்றாரா?’ என்று கிண்டலாக கேள்வியெழுப்பினாா்.
அகிலேஷுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அமித் ஷா, ‘சில குடும்ப கட்சிகளில், ஒரு குடும்பத்தின் 5 உறுப்பினா்கள் சோ்ந்து கட்சித் தலைவரை தோ்வு செய்கின்றனா். அத்தகைய கட்சிகளுக்கு தலைவா் தோ்வு என்பது எளிதாக இருக்கும். ஆனால், பாஜக குடும்பக் கட்சி கிடையாது. கோடிக்கணக்கான தொண்டா்களை உள்ளடக்கிய நடைமுறை பின்பற்றப்படுவதால், தலைவரை முடிவு செய்ய காலமெடுக்கிறது’ என்றாா்.
பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா கடந்த 2020-இல் இருந்து பதவி வகித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.