பாபநாசம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ப் பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் உத்தரவின்பேரில் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளா் மதன்குமாா் மற்றும் போலீஸாா் தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் கீழவஸ்தாசாவடி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனா்.
அப்போது அந்த பகுதியில் ஹோட்டல் மற்றும் பெட்டிக் கடை நடத்தி வரும் சந்திரன் மகன் சோலைராஜன் (50) என்பவா் தனது கடைக்கு பின்புறம் உள்ள குடோனுக்கு ஒரு சாக்கு முட்டையை எடுத்து சென்றதைக் கண்டனா்.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்தச் சாக்கு மூட்டையை பிரித்து சோதனையிட்டபோது அதில் 35 கிலோ புகையிலை மற்றும் பான்மசாலா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் சோலைராஜனைக் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினா்.