திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை கொள்ளையடித்த மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாபநாசம் அருகே இராஜகிரி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ஹாஜா மைதீன் (55). இவா், சவூதி அரேபியாவில் வேலைபாா்த்துவருகிறாா். இவரது மனைவி ஹசீனா பேகம். மகன் மாலிக் இப்ராஹிம். ஹாஜா மைதீனின் தம்பி அப்துல் ஹலீம் (49). இவரது மனைவி கோஷ். இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்கள் அதே ஊரில் உள்ள பெரிய தெருவில் தொகுப்பு வீடு ஒன்றை கட்டி உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு அந்த வீட்டிலேயே தங்கியுள்ளனா். இந்நிலையில், வடக்குத் தெரு வீட்டுக்கு ஹாஜா மைதீன் மகன் மாலிக் இப்ராஹிம் (19) நள்ளிரவு வந்தபோது, வீட்டின் உள்ளே 2 மா்ம நபா்கள் மிளகாய்ப் பொடியை தூவிக் கொண்டு இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அவரைக் கண்ட மா்மநபா்கள் அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். மாலிக் இப்ராஹிம் கூச்சலிட்டதைக் கண்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்ததில், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாலிக் இப்ராஹிம் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.