முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
பாமக கொறடா அருளை நீக்கக்கோரி பேரவைத் தலைவரிடம் மனு!
பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்க விடும் என்ற பாமக குழு, பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்தித்து மனு அளித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.
அதேபோல ராமதாஸுக்கு ஆதரவாக இருப்பவர்களை அன்புமணி நீக்கி வருகிறார். இதனால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருள் கட்சிப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று அருள் கூறியிருந்தார்.
தொடர்ந்து பாமக சட்டப்பேரவை கொறடாவாக இருக்கும் அருள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார்.
பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமித்து சட்டப்பேரவை ஆவணங்களில் மாற்றம் செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பேரவைத் தலைவரைச் சந்தித்து பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாமக தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தையும் அப்பாவுவிடம் வழங்கினர்.

அதேநேரத்தில் பாமக எம்எல்ஏ அருளும் பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளார். பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜி.கே. மணி, பாமகவின் கொறடாவாக அருள் தொடர்வார் என்று கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தை அருள், பேரவைத் தலைவரிடம் வழங்க உள்ளார்.
தன்னை பாமக கொறடா பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்க முடியாது என்றும் அருள் கூறியுள்ளார்.