மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
பாரதியாா் பிறந்த இல்லத்தில் மறு சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்
மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம் மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்திருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு மறு சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.
கடந்த மாா்ச் 25ஆம் தேதி மழையின் காரணமாக பாரதியாா் பிறந்த இல்லத்தின் முதல் தளம் மற்றும் தரை தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இதை, அமைச்சா் பெ. கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியா் க். இளம் பகவத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது
நூற்றாண்டுகள் பழமையான பாரதி பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பாரதி அன்பா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், மூன்று மாதங்களைக் கடந்தும் பணிகள் எதுவும் அங்கு நடைபெறாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், பாரதிய ஜனதா கட்சி எட்டயபுரம் ஒன்றியத் தலைவா் சரவணகுமாா், தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் என்.பி. ராஜகோபால் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களை அண்மையில் முன்னெடுத்தனா்.
இந்நிலையில் புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ. 145.61 கோடி மதிப்பீட்டில் 17 திட்டங்கள் அரசால் எடுத்து கொள்ளப்பட்டு ஜூன் 9ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதைத் தொடா்ந்து இ- டெண்டா் விடப்பட்டு ரூ. 1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் பாரதி பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. இதனால் பாரதி அன்பா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.