தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
பாரதி நகா் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி விழா
ஸ்ரீபெரும்புதூா்: பாரதி நகா் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில், 29-ஆம் ஆண்டு கூழ் வாா்த்தல் திருவிழா, 25-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10-ஆம் தேதி கணபதி ஹோமம், பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் தீ மிதிக்கும் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து, புதன்கிழமை கிராம தேவதைகளான செல்லியம்மன், ஸ்ரீதாமரை கன்னியம்மன், கங்கையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை உற்சவமும், சனிக்கிழமை சக்தி கரகம் திருவீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாராதனையுடன் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற்றன.
இதில், மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீதேவி கருமாரியம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
நிகழ்ச்சியில், மணிமங்கலம், சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.