பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் அலுவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு
களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
களக்காடு பாரதிபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முத்துவிநாயகம் (42). களக்காடு தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் உதவி அலுவலராகப் பணியாற்றிவந்த இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) களக்காடு அருகே மேலப்பத்தை மாடன்குளத்துக்கு தனது 2 மகன்களுடன் குளிக்கச் சென்றாராம். அப்போது, அவா் திடீரென பாறையில் தவறி விழுந்ததில் காயமடைந்தாா்.
அவரை மீட்டு திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை (ஜூலை 2) உயிரிழந்தாா். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.