பாலிதீன் பைகள் பயன்பாடு: 47 கடைகளுக்கு அபராதம்!
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதிகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய 47 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாமில் வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதிகளில் பாலிதீன் பயன்பாடு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாா்ச் 5ஆம் தேதி முதல் மாா்ச் 13ஆம் தேதி வரையில் பல்லடம், திருப்பூா், அவிநாசி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, பாலிதீன் பைகள் பயன்படுத்திய 47 கடை உரிமையாளா்களுக்கு ரூ.77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள்கள் குறித்து 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.