பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கிக்கு சீல்: ரூ.35 ஆயிரம் அபராதம்!
மாா்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கியை, குழித்துறை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தனா்.
மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்திருந்த கிட்டங்கி கண்டறியப்பட்டு, அங்கிருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து கிட்டங்கியை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். மேலும், கிட்டங்கிக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.