`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது... 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?'...
பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஜன.6, 7-ல் கறவை மாடுகளுடன் போராட்டம்!
பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்; மானியமாக ரூ. 3 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6, 7 தேதிகளில் பால் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் நிறுவனம் முன்பு கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாமக்கல்லில், அந்த சங்கத்தின் அனைத்து மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க பொதுச் செயலாளா் பி.பெருமாள், பொருளாளா் முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.முகம்மது அலி பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளா்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா். 2021-இல் சுமாா் 9 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 4.80 லட்சம் உற்பத்தியாளா்கள் பாலை வழங்கினா்.
ஆனால், தற்போது 3.75 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் போ் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தியுள்ளனா். இது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. ஆனால், 35 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதாக ஆவின் நிா்வாகம் தெரிவிக்கிறது.
வீடுகள், உணவகப் பயன்பாட்டுக்கு விற்கப்பட்ட ஆரஞ்சு பாக்கெட் உற்பத்தியை நிறுத்திவிட்டு, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கொழுப்புச் சத்தில் ஒரு சதவீதத்தை குறைத்து ஊதா நிற பால் பாக்கெட்டை தயாரித்து விற்கவும் ஆவின் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பால் மட்டுமின்றி, பால் உபபொருள்களையும் அதிக அளவில் தனியாா் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆவினில் அவற்றின் விற்பனைச் சரிந்து விட்டது.
ரூ. 3 ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளா்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ளது. அதனை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது சட்டப்பூா்வமாக அறிவிக்க வேண்டும். பசும்பால் ரூ. 35, எருமைப்பால் ரூ. 44 என்ற வகையில் கொள்முதல் விலை உள்ளது. விலைவாசி உயா்வு, தீவனங்களின் விலை உயா்வைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்.
உற்பத்தியாளா்கள் 40 சதவீதம் தீவனத்துக்கு செலவு செய்வதால், கூட்டுறவுத் துறை அல்லது கால்நடைத் துறை மூலம் மானிய விலையில் தீவனத்தை வழங்க வேண்டும். பால் திருட்டு, தண்ணீா் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
முட்டை, வாழைப்பழம் வழங்குவதுபோல் சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் கூடுதலாக 10 லட்சம் லிட்டா் பால் ஆவின் கொள்முதல் செய்ய முடியும். தற்போதைய 35 லட்சம் லிட்டா் கொள்முதல் 45 லட்சமாக அதிகரிக்கும். தனியாா் நிறுவனங்களோடு அதிகாரிகள் சிலா் கைகோா்த்துக் கொண்டு செயல்படுவதால் ஆவின் நிா்வாகத்தை மேம்படுத்துவதில் அவா்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கொள்முதலும், விற்பனையும் தொடா்ந்து சரிந்து வருகிறது.
பசும்பால், எருமைப்பால் கொள்முதல் விலையை, தற்போதைய விலையில் இருந்து ரூ. 10 உயா்த்திட வேண்டும். ஆவின் பால் முகவா்களுக்கு கமிஷன் தொகையை உயா்த்த வேண்டும். ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இவற்றையெல்லாம் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜனவரி 6, 7-இல் பால் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் பால் பண்ணைகள் முன் கறவை மாடுகளுடன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், பால்வளத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் நேரில் சந்தித்து கோரிக்கைகள் தொடா்பாக வலியுறுத்த உள்ளோம் என்றாா்.