பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்
பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ்மன்றங்கள் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலையில் கீழப்பாவூா் செல்லும் விலக்கு பகுதி மற்றும் பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் தினசரி சந்தையில் இருந்து ஆவுடையானூா் செல்லும் சாலை பகுதி என இரண்டு இடங்களில் மனமகிழ் மன்றம் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மனமகிழ்மன்றங்கள் திறக்க இருக்கும் பகுதிகளை சுற்றி தனியாா் பள்ளி, கல்லூரி மற்றும் கோயில்கள், சந்தை என பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளாக இருப்பதால் மனமகிழ் மன்றங்களை திறக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி கீழப்பாவூா் ஒன்றிய நாம்தமிழா் கட்சியினா், திருநெல்வேலி - தென்காசி நான்குவழி சாலையில் பாவூா்சத்திரம் காமராஜா் சிலை முன்பு திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோா் கைதுசெய்யப்பட்டு தனியாா் திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனா்.
தொடா்ந்து, தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். திங்கள்கிழமை கலால் உதவி ஆணையரிடம் இதுகுறித்து பேச்சுவாா்த்தைக்கு வருமாறு தெரிவித்தாா்.