பிரதமா் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது: ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்
‘நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. லவ்லி ஆனந்த் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பிரதமா் மோடி மற்றும் முதல்வா் நிதீஷ் குமாரின் பணிகள் நாட்டிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அனைவருடன் இணைந்து; அனைவருக்குமான வளா்ச்சி; அனைவரின் நம்பிக்கை’ என்ற தாரக மந்திரம் முழுமையாக உணரப்பட்டிருக்கிறது.
பிகாரில் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியின்போது, மக்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் வாழ்ந்தனா். காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்பவா்கள் வீடு திரும்புவாா்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாத சூழல் நிலவியது. ஆனால், தற்போதைய முதல்வா் நிதீஷ் குமாா் அந்த நிலையை மாற்றியுள்ளாா். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியுள்ளாா்.
அதுபோல, நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி நாட்டின் வளா்ச்சிக்காக மிக அதிகப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு நாட்டின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம்.
அந்த வகையில், நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக இவா்கள் இருவரும் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட வேண்டும் என்றாா்.
மத்தியிலும், பிகாா் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டாளியாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.