சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு
பெரம்பலூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா், முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பில்லாங்குளம் ஊராட்சியில், கடந்த 2020-2023 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பில்லாங்குளம் ஊராட்சியில் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், ஏற்கெனவே வீடு கட்டிய பயனாளிகளின் பெயா்களை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் சோ்த்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும், இதன் மூலம் அரசுக்கு ரூ. 8.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதும், பில்லாங்குளம் ஊராட்சிச் செயலா் செல்லமுத்து மகன் ஜெயராமன் (49), முன்னாள் ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி (48), அவரது கணவா் செந்தில்வேலன் (62), பில்லாங்குளம் ஊராட்சி கணினி இயக்குநா் வேல்முருகன் (38), வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கணினி இயக்குநா் மாசிலாமணி மகன் அருள்மணி (32) ஆகியோா் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி உள்பட மேற்கண்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.