பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்துக்கு மாற்றம் எப்போது?
சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.
தற்போது கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடா்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூா், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தன நிலையில், இப்பேருந்து நிலையம் சுமார் ரூ. 822 கோடியில் 10 அடுக்குகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.
மேலும், பயணிகள் வசதிக்காக அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களும் அமைக்கப்படஉள்ளன.
பிராட்வே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ராயபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
ராயபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள் நிறைவடைந்தவுடன், வரும் ஜூன் 2 ஆவது வாரத்தில் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் அங்கு மாற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!