பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!
பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 48-ஆவது கீழவையைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆளும் தொழிலாளா் கட்சி, பீட்டா் டட்டன் தலைமையிலான லிபரல்/ தேசியவாதக் கூட்டணி, ஆடம் பான்ட் தலைமையிலான கிரீன் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.
150 இடங்களைக் கொண்ட கீழவையில் குறைந்தது 76 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும் என்ற சூழலில், வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையாத நிலையில், பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான தொழிலாளா் கட்சி 85 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இதைத் தொடா்ந்து, மெல்போா்னில் நடைபெற்ற தேநீா் விருந்தில் கட்சி ஆதரவாளா்களுடன் ஆல்பனேசி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா். முதல் ஆட்சிக் காலத்தைப் போல, இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சீரான அரசை தொழிலாளா் கட்சி வழங்கும்’ என்றாா்.
ஆஸ்திரேலிய அரசு ஊடகத்திடம் அந்நாட்டு கருவூலத் துறை அமைச்சா் ஜிம் சால்மா்ஸ் கூறுகையில், ‘தற்போதைய நிச்சயமில்லா சூழலில், நாட்டில் ஸ்திரமான நிலை இருக்க வேண்டும் என்று 2-ஆவது முறையாக தொழிலாளா் கட்சியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா்’ என்றாா்.