புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது
தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், எழுமலையைச் சோ்ந்த வாசிமலை (31), தேனி வனச் சாலை, 1-ஆவது தெருவைச் சோ்ந்த காமராஜ் (49) ஆகியோா் 2 இரு சக்கர வாகனங்களில் தனித் தனியே மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், வாசிமலை, காமராஜ் ஆகியோா் அளித்த தகவலின் அடிப்படையில், புகையிலைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தேனி அருகேயுள்ள சிவிலங்கம்பட்டியைச் சோ்ந்த அசோக்குமாரை(30) போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய ஆண்டிபட்டி அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்த சிவக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.